Published Date: July 9, 2025
CATEGORY: CONSTITUENCY

வாழ்வில் சவால்களை எதிர்கொள்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மச் சேவைகள்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 48வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமை வகித்தார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 1533 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் தான் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதைப்போல, கல்வி மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன. இன்றைய வளர்ச்சி நவீன தொழில்நுட்பங்களில் உதவியோடு இருத்தல் வேண்டும். தற்காலத்தேவைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். சிறு சிறு துன்பங்களை கண்டு அச்சப்பட வேண்டாம். எந்தவித நிலையையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். முன்னேற்றம் அடைவது என்ற ஒன்றை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும். பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற வேண்டும். வாழ்வில் சவால்களை எதிர்கொள்வதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது என்றார் அவர்.
விழாவில் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியையுமான யாழ் சு.சந்திரா உள்ளிட்ட அனைத்து துறை பேராசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை இணை பேராசிரியையும், முன்னாள் மாணவிகள் சங்கத்தின் செயலாளர் அ. ராஜேஷ்வரபுஷ்பம், வணிகவியல் துறை இணை பேராசிரியையும், முன்னாள் மாணவிகள் சங்கத்தின் பொருளாளருமான அ. சமீன்பானு ஆகியோர் செய்தனர்.
Media: Dinamani